கானகமே! மரச்செறிவே! கானுறையும் விலங்குகளே!
கலகலக்கும் பறவைகளே! கமகமக்கும் மலரினமே!
கடுவினையால் கலங்கிநிற்கும் நிலையேனோ எந்தனுக்கே!
கடிதுவந்தே காரணத்தை விளக்கிடுவீர் தோழர்களே!
மரங்களதை முறித்தேனோ! மனமதுவால் சபித்தேனோ!
மாசறியா விலங்குகளின் உயிரதையும் குடித்தேனோ!
மகிழ்ந்திருக்கும் பறவைகளின் கூடுகளைக் கலைத்தேனோ!
மணமணக்கும் மலர்களதன் மணமதையே முகர்ந்தேனோ!
காலமெல்லாம் உங்களையே காப்பதிலே கழித்தேனே!
கங்குல் பகல் பாராமல் கடுமையதாய் உழைத்தேனே!
ஞாலமிதில் நான்நிதமும் நல்வினையில் திளைத்தேனே!
நலிவதுவால் மனம்கலங்கும் நிலையெனக்கு ஏன்தானோ!
பனிமலரே! பறவைகளே! பாதகமே ஏன்தானோ!
கவிகொஞ்சும் கானகமே கலங்குவதும் எதனாலே!
மனமிரங்கி தயைசெய்து மன்னவனைக் காப்பீரே!
மதிமயங்கும் நிலைமாற்றி நல்வழியில் சேர்ப்பீரே!

Leave a Reply