உழுதுநெல் பயிரிட்டு உலகுக்கே உணவூட்டும்
உழைக்கும் வர்க்கமிங்கே உணவின்றி வாடுதம்மா!
வற்றாத காவிரியும் வற்றிடவே வான்மழையும்
முற்றாகப் பொய்த்திடவே முகம்சுருங்கிப் போனாரே!
தெரியாமல் வேறுதொழில் திகைப்போடு நோக்குதம்மா!
திசையறியாப் புள்ளினமாய்த் திண்டாடி நோகுதம்மா!
உறைதற்குக் குடிசையுமே உடையாக இரண்டு முழம்!
உணவுக்கு ஏதுமின்றி உழல்கின்றார் வறுமையிலே!
முன்னோரின் சொத்தாய் முழுமதியும் தென்றலன்றி
மண்ணோடு உழன்றிட்ட மானிடர்க்கு ஏதுமில்லை!
தன்கையைத் தான் ஊன்றித் தரணியிலே உயர்ந்திடவே
ததிங்கினத்தோம் போட்டும் தாளாத துயரமதே!
பொன்னேர் பூட்டி பூமியினைத் தான் உழுதும்
முன்னேறும் வழியின்றி முடங்கித்தான் போனாரே!
அன்னவர்தம் வாழ்வில் அடைந்திடவே நல்சுகத்தை
பொன்னித்தாய் நீயும் புதுவழியைக் காட்டிடம்மா!
தன்னேர் இல்லாத தமிழ் மண்ணில் தான் பிறந்தும்
தாளாத கொடுந்துயரால் தளர்ச்சி மிக அடைந்தாரே!
கண்ணேறு பட்டதுவோ! காலம் செய் சூழ்ச்சியிதோ!
காவிரித்தாய் நீயும் காட்டிடம்மா ஒரு வழியை!

Leave a Reply