மண்:

மண்ணில் தோன்றிடும் யாதொரு உயிரும்

மற்றொரு நாளில் மறைந்திடுமேயாம்!

விண்ணில் வலம் வரும் ஞாயிறும் திங்களும்

விதியதன் வழியே உலவிடுமேயாம்!

நீர்:

விசும்பின் மழைத்துளி வீழ்ந்திட மண்ணில்

வியத்தகு விந்தை நிகழ்ந்திடும் ஆங்கே!

பசும்புல் முதலாய்த் தாவரம் யாவும்

பயத்திடும் நன்மை மண்ணுயிர்க்கெல்லாம்!

காற்று:

பூமியின் மேலே விரவிடும் காற்றே!

புவி உயிர்க்கெல்லாம் உயிர்நாடி!

போதரவாக நாம் அதைப் பேண

புரிந்திடும் நன்மை பலகோடி!

தீ:

உயிர்களில் நிறைந்தே விளங்கிடும் தீயே!

உயிர்களுக்கெல்லலாம் ஆதாரம்!

உலகினில் முறையாய்ப் பேணிடத்தவறின்

உயிர்களுக்கே அது சேதாரம்!

வெளி:

வெளியது பரந்தே விரிந்தே திகழ!

வினைகள் பலவும் நிகழ்ந்திடுதே!

வியனுலகெங்கும் நலமே நிறைய

நயனுடன் உயிர்கள் மகிழ்ந்திடுதே!

ஐம்பெரும் சக்தி அளவோடிருக்க

அகிலம் எங்கும் இன்பமயம்!

அளவது மீறி நிலையது பிறழ

ஆங்கே தோன்றும் துன்பமதே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *