ஏரியிலே நீரைக் கண்டேன்!
ஏற்றமதும் உறங்கக் கண்டேன்!
ஏர் உழும் உழவர் முகத்தில்
இன்பமது தவழக் கண்டேன்!
நாகணவாய்க் குரலைக் கேட்டேன்!
நாரைகளின் இரைச்சல் கேட்டேன்!
நயமுடனே உழவர் பாடும்
நற்றமிழ் இசையைக் கேட்டேன்!
ஓடையிலே நீரைப் பார்த்தேன்!
ஓடும் நீரில் உருவம் பார்த்தேன்!
ஓடை நீர் பாய்வதனாலே
உவந்து நிற்கும் பயிரைப் பார்த்தேன்!
இயற்கை மீது நேசம் கொண்டேன்!
இதயமதில் இன்பம் கொண்டேன்!
எழுஞாயிறு தரும் சுகத்தில்
எனை இழந்தே மயக்கம் கொண்டேன்!

Leave a Reply