உழவனுக்கோ மிஞ்சவில்லை உழக்கதுவும் உழவதனால்!
உழைப்பவனோ வாடுகின்றான் வறுமையதன் தோழமையால்!
பாடுபடும் தொழிலாளி பதைக்கின்றான் பட்டினியால்!
பாரினிலே இதை மாற்ற யாரொருவர் முனையவில்லை!
காளையொடு உழைத்தேகி கழனியிலே நெல்விளைத்தும்
கால்வயிறும் நிரம்பாமல் கலங்கிநிற்கும் விவசாயி!
கடும் வெயிலில் உடல் உருகி கண்மயங்க உழைத்தபின்னும்
கதியின்றித் தடுமாறிக் களைத்திருக்கும் உழைப்பாளி!
கொழு நுனியால் வெறுநிலத்தைக் கூராய்ந்துப் பயிர்வளர்த்தும்
கும்பியதும் கருகிடவே கூனி நிற்கும் விவசாயி!
குறையேதும் அறியாமல் அறிந்தபின்னும் அயராமல்
குவலயத்தில் நடைப்பிணமாய்க் கொக்கரிக்கும் அறிவிலிகள்!
இந்த நிலை மாறுவது எங்ஙனமே என்றெண்ணி
ஏங்கித் தவித்து நிற்பார் ஏளனமாய்ப் பாட்டாளி!
வந்தவரும் போனவரும் வகை வகையாய்க் கதை சொன்னார்!
நொந்து நிற்கும் ஏழையரின் நிலை என்று மாறிடுமோ!

Leave a Reply