அனைத்துயிரும் உலகில் அகமகிழ்ந்தே வாழ
அமுதென உணவினை அளித்திடும் தாவரமே!
தினைத்துணையும் மனதில் கபடமில்லா உயிரே!
தேசமிதில் வாழ வழங்கிடும் நல்வரமே!
உயிர்வளி தான் வழங்கி உயிர்நீர் அது வழங்கி
உணவதுவும் வழங்கும் உயர்குணம் உடைஉயிரே!
உலகுயிர் தனைக்காக்க உதவிகள் புரிவதற்கே
உலகினில் உய்த்திடும் உயர்தினை தாவரமே!
அவனியின் ஆதாரம்! அடைந்திடும் சேதாரம்!
ஆயினும் அழியாமல் எடுத்திடும் அவதாரம்!
உயிர்களின் துயர்போக்கி உலகின் இடர்நீக்கி
உவந்திட உயிர்களதே உதவிடும் உன்னதமே!
தாவென்று கேட்காமல் தந்திடுமே வரமே!
நோயெனில் தீர்ந்திடவே தந்திடுமே மருந்தே!
உடுத்திட உடையாகி உறைந்திட வீடாகிப்
படுத்திடப் பாயாகிப் பயன் தருமே கோடி!
கோடையில் நிழலாகிக் குளிருக்கு இதமாகி
வாடையில் உரமாகி வையம் காத்திலங்கும்!
ஆடையும் அதுவாகி அன்பினில் தாயாகி
அனைத்துயிரும் வணங்கும் அற்புதம் தாவரமே!

Leave a Reply